தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதி
விழுப்புரத்தில் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் அய்யனார் குளத்தெரு மேற்கு பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் அந்த வாய்க்கால் நிரம்பி தண்ணீர் செல்ல வழியின்றி குட்டைபோல் அங்குள்ள தெருவிலேயே தேங்கி நிற்கிறது. ஏனெனில் கே.கே.சாலையில் புதியதாக வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் கடந்த 40 நாட்களாக நடந்து வருகிறது.
இதன் காரணமாக அய்யனார் குளத்தெரு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு மாற்று வழியாக எம்.ஜி.சாலை வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்ல வேண்டும். ஆனால் அப்பகுதியில் உள்ள வாய்க்காலும் தூர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல வழியின்றி குட்டைபோல் தேங்கி நிற்கிறது.
பொதுமக்கள், வியாபாரிகள் அவதி
இதனால் இவ்வழியாக எம்.ஜி.சாலை மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள், மளிகை பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள், திரு.வி.க. சாலை, காமராஜர் வீதி வழியாக சுற்றிக்கொண்டு செல்கின்றனர். இவ்வாறு ஒரே நேரத்தில் பொதுமக்கள் செல்வதால் காலை, மாலை வேளைகளில் திரு.வி.க. சாலை, காமராஜர் வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் அய்யனார் குளத்தெரு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரினால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பலவித தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதுபற்றி நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனால் தங்களுடைய வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் புலம்புகின்றனர். எனவே கே.கே.சாலை வாய்க்கால் பணிகள் முடியும் வரை அய்யனார் குளத்தெரு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை தினமும், நகராட்சி வாகனம் மூலம் வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.