மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு


மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு
x

அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய உயர்மட்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,

அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் தலைவராகவும், தொழிலாளர் நலத்துறை, மனிதவள மேலாண்மைத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட 9 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்மட்ட குழுவானது அனைத்து அரசு துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் வழங்கப்படும் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு அளிக்கப்படுவதை கண்காணிக்கும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு நிரப்பப்படாத பட்சத்தில், அப்பணியிடங்கள் அடுத்த ஆண்டிற்கு முறையாக முன்கொணரப்படுகின்றனவா என்பதனையும் இந்த குழுவானது கண்காணிக்கும்.

மாற்றுத்திறனாளிகள் பணிபுரிய உகந்த பதவியிடங்கள் கண்டறியப்படுவதையும், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்படுவதையும் இந்த குழு கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story