குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை - மெரினாவில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்
உழைப்பாளர் சிலை அருகே இந்த ஆண்டு குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகின்ற 26-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
வழக்கமாக மெரினா கடற்கரை காந்தி சிலை முன்பாக குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் மெட்ரோ பணிகள் காரணமாக இந்த ஆண்டு அங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கான ஒத்திகை கடற்கரை சாலையில் 20, 22, 24 ஆகிய தேதியில் இருந்து 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை காரணமாக மெரினாவில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இந்த ஒத்திகையில் முப்படை, தேசிய மாணவர் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, காவல் துறை, தீயணைப்பு துறை உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும் பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.