பரணிபுத்தூர் சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை


பரணிபுத்தூர் சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Sept 2023 10:27 AM IST (Updated: 19 Sept 2023 12:00 PM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் பரணிபுத்தூர் சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம்

தாம்பரத்தில் இருந்து மதுரவாயல் வரை செல்வதற்கு பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. அதன் அருகிலேயே சில பகுதிகளில் சர்வீஸ் சாலையும் உள்ளது. குறிப்பாக இரண்டாம் கட்டளையில் இருந்து மவுலிவாக்கம் வரை இந்த சர்வீஸ் சாலையை பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மழை காலங்களில் பரணிபுத்தூர், அய்யப்பன்தாங்கல், கொளுத்துவான்சேரி, மவுலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்காக தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையை உடைக்காமல் அதற்கு அடியிலேயே புஷ் அண்ட் துரோ முறையில் 2 இடங்களில் சிறு கால்வாய்கள் அமைக்கப்பட்டன.

இதற்காக பரணிபுத்தூர் சர்வீஸ் சாலை முழுவதுமாக தோண்டப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக அந்த சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் இருந்து வந்தது.

தற்போது அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அந்த சிறு கால்வாய் மீது தற்காலிகமாக மண்ணை கொட்டி மூடி வைத்துள்ளனர்.

இருப்பினும் ஆபத்தான அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் அந்த பகுதியில் மண் முழுவதும் உள்ளே இறங்கினால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு விடும். எனவே இந்த பகுதியில் மீண்டும் தார் சாலை அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வர வேண்டும் எனவும் ஆபத்தான முறையில் பொதுமக்கள் செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெடுஞ்சாலைதுறையினர் இந்த சர்வீஸ் சாலையில் உடனடியாக தார் சாலையை அமைத்து தர வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story