தானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுது


தானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுது
x
தினத்தந்தி 13 Oct 2023 2:30 AM IST (Updated: 13 Oct 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் தானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுதாகி கிடக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

நீலகிரி

கூடலூரில் தானியங்கி குடிநீர் எந்திரங்கள் பழுதாகி கிடக்கின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

பிளாஸ்டிக் தடை

நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசமாக உள்ளதால் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும், சுற்றுலா தலங்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால், இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை கொண்டு வருகின்றனர்.

இவற்றை பயன்படுத்தி விட்டு வனப்பகுதியில் தூக்கி வீசிவிட்டு செல்வதால், மண்ணின் வளம் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன.

குடிநீர் எந்திரங்கள்

இதை கருத்தில் கொண்டு நீலகிரியில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் விற்பனையை தடுக்கவும், வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கொண்டு வருவதை தடுக்கவும் மாவட்ட, மாநில எல்லைகளில் பல்வேறு துறை அதிகாரிகள் இணைந்து தீவிர வாகன சோதனை மேற்கொண்டு அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

எனினும் சுற்றுலா பயணிகளின் தாகத்தை தணிக்க மாவட்டம் முழுவதும் தானியங்கி குடிநீர் எந்திரங்கள்(வாட்டர் ஏ.டி.எம்.) வைக்கப்பட்டு உள்ளது. அவற்றில் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால், அதற்கு ஏற்ப குடிநீரை பிடித்து குடித்து கொள்ளலாம்.

அவதி

இந்த நிலையில் கூடலூரில் உள்ள குடிநீர் எந்திரங்கள் பெரும்பாலான இடங்களில் பழுதாகி கிடக்கின்றன. இங்கு பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களும் எங்கும் விற்பனை செய்யப்படுவது இல்லை. இதன் காரணமாக குடிநீர் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, இங்கு குடிநீர் பாட்டில்கள் கிடைக்காமல் தானியங்கி குடிநீர் எந்திரங்களை நாட வேண்டிய நிலை உள்ளது. ஆனால் பெரும்பாலான எந்திரங்கள் பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்து வருகிறோம். எனவே எந்திரங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story