ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுங்கள் - 24 மணிநேரம் கெடுவிதித்த திருநெல்வேலி மாநகராட்சி
தென்மாவட்டங்களில் கடந்த மாதம் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நெல்லை,
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த மாதம் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி பெரும் பாதிப்பை சந்தித்தது.
இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்கள், வியாபாரிகளுக்கு திருநெல்வேலி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
கட்டுமான இடிபாடுகளை போக்குவரத்திற்கு இடையூறாகவோ, கழிவுநீர் செல்லும் கால்வாய்களிலோ கொட்டக்கூடாது. பொதுமக்கள், வியாபாரிகள் தங்கள் ஆக்கிரமிப்புகளை 24 மணிநேரத்திற்குள் அகற்றி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்ற தவறும்பட்சத்தில் மாநகராட்சி மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதில் பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் திரும்ப வழங்கப்படமாட்டாது என மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.