40 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


40 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x

சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த 40 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த 40 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர்.

காய்கறி மார்க்கெட்

சிவகாசி நகரின் மையப்பகுதியில் அண்ணா காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ளது. இதில் 140 பேர் உரிய கட்டணம் செலுத்தி கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் மேலும் 40 பேர் உரிய வாடகை செலுத்தாமலும், விதிகளை மீறி பொதுமக்கள் நடந்து செல்ல பயன்படுத்தும் பகுதிகளை ஆக்கிரமித்து கடைகளை நடத்தி வந்தனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் அளித்தனர்.

அகற்ற உத்தரவு

இந்தநிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்ட கடைகளை அகற்ற கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வருவாய் அதிகாரி சரவணன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை திடீரென அண்ணா காய்கறி மார்க்கெட்டிற்கு சென்றனர்.

அங்கு நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை மணல் அள்ளும் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதில் 40 கடைகள் அகற்றப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது, அண்ணா காய்கறி மார்க்கெட்டில் அனுமதிக்கப்பட்ட வியாபாரிகளை தவிர மற்றவர்கள் கடை நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக இடங்களை ஆக்கிரமித்து கடைகள் நடத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இன்றி காய்கறி வியாபாரம் செய்ய வேண்டும் என்றார். மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பின்னர் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக இடவசதி ஏற்பட்டது.


Next Story