வறட்சியால் பாதிக்கப்பட்ட 25 வட்டார விவசாயிகளுக்கு ரூ.181 கோடியே 40 லட்சம் நிவாரணம் -அரசாணை வெளியீடு


வறட்சியால் பாதிக்கப்பட்ட 25 வட்டார விவசாயிகளுக்கு ரூ.181 கோடியே 40 லட்சம் நிவாரணம் -அரசாணை வெளியீடு
x

வறட்சியால் பாதிக்கப்பட்ட 25 வட்டார விவசாயிகளுக்கு ரூ.181 கோடியே 40 லட்சம் நிவாரணமாக வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 1.10.2022 முதல் 31.12.2022 வரையிலான வடகிழக்கு பருவமழைக்காலத்தில் குறைவான மழைப்பொழிவு ஏற்பட்டதன் காரணமாக விவசாய பயிர்கள் கருகின. 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பயிர்கள் பாதிப்புக்கு உள்ளான மேற்படி மாவட்டங்களில் உள்ள 25 வட்டாரங்கள் மிதமான வேளாண் வறட்சியால் பாதிப்புக்கு உள்ளானதாக தமிழக அரசு அறிவித்தது.

1 லட்சத்து 87 ஆயிரம் விவசாயிகள் பாதிப்பு

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில், மணமேல்குடி, சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை, தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, திருச்சுழி ஆகிய 25 வட்டாரங்களில் கருகிப்போன விவசாய பயிர்களின் மதிப்பு குறித்த விவரங்களை கணக்கிட்டு அதுதொடர்பாக அறிக்கை அளிக்க வருவாய் நிர்வாக ஆணையம் மற்றும் மாநில நிர்வாக ஆணையருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி வருவாய் நிர்வாக ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. முடிவில், மேற்படி 25 வட்டாரங்களில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 832 ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய பயிர்கள் கருகி உள்ளதாகவும், இதன்மூலம் 1 லட்சத்து 87 ஆயிரத்து 275 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுக்கு அறிக்கை அளித்தது.

ரூ.181 கோடி நிவாரணம்

மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181 கோடியே 40 லட்சத்து 10 ஆயிரத்து 638 நிவாரணமாக வழங்கப்பட வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையை ஏற்று தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.181 கோடியே 40 லட்சத்து 10 ஆயிரத்து 638 ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 ஆயிரத்து 746 விவசாயிகள் 6 கோடியே 62 லட்சத்து 60 ஆயிரத்து 714 ரூபாயும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 305 விவசாயிகள் 132 கோடியே 70 லட்சத்து 95 ஆயிரத்து 775 ரூபாயும், சிவகங்கை மாவட்டத்தில் 25 ஆயிரத்து 847 விவசாயிகள் 25 கோடியே 76 லட்சத்து 85 ஆயிரத்து 982 ரூபாயும், தென்காசி மாவட்டத்தில் 17 ஆயிரத்து 96 விவசாயிகள் 13 கோடியே 85 லட்சத்து 38 ஆயிரத்து 930 ரூபாயும், தூத்துக்குடி மாவட்டத்தில் 61 விவசாயிகள் 4 லட்சத்து 43 ஆயிரத்து 273 ரூபாயும், விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 220 விவசாயிகள் 2 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 964 ரூபாயும் நிவாரணமாகப் பெறுவார்கள் என்றும் அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


Next Story