வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண உதவி
அரியலூர் மாவட்டத்தில் நடந்த வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண உதவியை அமைச்சர்கள் கணேசன், சிவசங்கர் வழங்கினர்.
தஞ்சாவூர்;
அரியலுர் மாவட்டம் திருமானூர் அருகே நாட்டுவெடி தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்த தஞ்சை மாவட்டம் கண்டியூரை சேர்ந்த சுந்தர் (வயது 21), சந்துரு (21), அனித்குமார் (27), திருவையாறை சேர்ந்த பாஸ்டின் (42), அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்த முருகானந்தம் (20), மஞ்சமேட்டை சேர்ந்த கருப்பையன் (33), வெற்றியூரை சேர்ந்த கார்த்திக் (22) ஆகிய 7 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இவர்களில் கார்த்தி, சுந்தர், முருகானந்தம், பாஸ்டின் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் நேற்று இரவு பார்வையிட்டனர்.பின்னர் அமைச்சர்கள், படுகாயம் அடைந்த 4 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரண உதவியும், காயம் அடைந்த 3 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவித்தொகையையும் வழங்கினர். அப்போது அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரிஸ்வர்ணா, சின்னப்பா எம்.எல்.ஏ., மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூதிபதி, மற்றும் அதிகாரிகள் இருந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த முருகானந்தம் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.