யானைகள் வழித்தடம் தொடர்பாக கருத்துக் கேட்புக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
யானைகள் வழித்தடம் தொடர்பாக அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களை அறியும் வகையில் விரிவான கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு வனத்துறை கடந்த ஏப்ரல் 29 அன்று யானைகள் வழித்தடம் தொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் 42 இடங்களில் யானைகள் வழித்தடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக ஒரு வார காலத்திற்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மக்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
யானைகள் வழித்தடம் தொடர்பான அறிக்கையினை வெளியிட்ட வனத்துறை போதுமான கால அவகாசம் வழங்காமல் ஒரு வார காலத்திற்குள் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என கோரியிருப்பது எந்த வகையிலும் பொறுத்தமானதல்ல என சுட்டிக்காட்டுவதோடு, குறைந்தபட்சம் அறுபது நாட்களுக்கு கருத்து கேட்புக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் யானைகள் வழித்தடம் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களில் வசிக்கும் மக்கள், அரசியல் கட்சிகள், சூழலியல் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களை அறியும் வகையில் விரிவான கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்திட முன்வர வேண்டுமென வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
எனவே, தமிழக அரசும் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு மக்களிடையே எழுந்துள்ள அச்சத்தை போக்கவும், யானைகள் வழித்தடம் தொடர்பான பிரச்சினையில் வன உரிமை அங்கீகார சட்டம் 2006 அளித்துள்ள உரிமைகளை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.