ரூ.5,500 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு; அறநிலையத்துறை மீது அவதூறு பரப்புவதாக அமைச்சர் சேகர்பாபு பதிலடி


ரூ.5,500 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு; அறநிலையத்துறை மீது அவதூறு பரப்புவதாக அமைச்சர் சேகர்பாபு பதிலடி
x
தினத்தந்தி 23 Nov 2023 5:15 AM IST (Updated: 23 Nov 2023 5:16 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் ஆன்மிகத்தை தன்னுடைய இரு கரங்களால் அரவணைப்பதால் இதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இந்துக்களின் வாக்குகள் ஒன்றுகூட தங்கள் பக்கம் வராது என்று நம்பிக்கையை இழந்துவிட்ட காரணத்தால், தொடர்ந்து இது போன்ற அவதூறுகளை பரப்புகிறார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது தமிழகத்தில் கோவில் சொத்துக்கள் திருடப்படுவதாக பேசினாா். அவரது குற்றச்சாட்டுக்கு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மறுப்பு தெரிவித்து உள்ளார். சென்னையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் பெரும் பணிகளை ஆற்றியுள்ளது. ஆனால் அந்த பணிகளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புகிறார்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்கள் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கும் வகையில் "குறைகளை பதிவிடுக" என்ற திட்டத்தை கொண்டு வந்தோம். கோவில்களுக்கு சொந்தமான சொத்து விவரங்கள் அடங்கிய 4 கோடி பக்கங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இந்த ஆட்சி ஏற்பட்டதில் இருந்து இது இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்ற ஒரு பிம்பத்தை மத்திய அரசை சேர்ந்தவர்கள் உருவாக்க முயற்சித்தார்கள். அதில் அவர்கள் நினைத்தது போல் எள்ளளவும் வெற்றியடைய முடியவில்லை, படுதோல்வியே அடைந்தார்கள். அவர்கள் நினைத்தது நடைபெறவில்லை என்பதற்காக உயர் பொறுப்பில் இருக்கின்ற ஒருவர் (மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்) குற்றச்சாட்டை கூறுகிறார்.

உளவுத்துறை நன்றாக செயல்பட்டு கொண்டிருப்பதால் தான் தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு, ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. கோவிலில் பெட்ரோல் குண்டு வீசியவரை உடனடியாக கைது செய்துள்ளோம். உயரிய பொறுப்பில் உள்ளவர்கள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை கூறினால் அதன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது.

உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது நிச்சயம் கண்டிக்கத்தக்கது. முதல்-அமைச்சர் பொறுப்பேற்ற பிறகுதான் கோவில்களுக்கு சொந்தமான சுமார் ரூ.5,500 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்து இருக்கின்றோம். அதேபோல 1,165 கோவில்களில் பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தி இருக்கின்றோம்.

கடத்தப்பட்ட சிலைகள், கலைப் பொருட்கள், உலோகத் திருமேனிகள் என 400 இனங்கள் இதுவரையில் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆட்சி இறை சொத்தை மீட்கின்ற ஆட்சி தானே தவிர, இறை சொத்துக்களை களவாடுவதற்கு உதவுகின்ற ஆட்சி இல்லை என்பதை நிர்மலா சீதாராமனுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கோவில்கள் விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது.

இந்து சமய அறநிலையத்துறை மீது யார் குற்றம் சாட்டினாலும், அதற்கு வெளிப்படைத்தன்மையோடு பதில் கூற துறை தயாராக இருக்கின்றது. கோவில்கள் சார்பில் நடத்தப்படும் 1,100-வது இணைகளுக்கான திருமணங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைக்கவுள்ளார்.

முதல்-அமைச்சர் ஆன்மிகத்தை தன்னுடைய இரு கரங்களால் அரவணைப்பதால் இதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் இந்துக்களின் வாக்குகள் ஒன்றுகூட தங்கள் பக்கம் வராது என்று நம்பிக்கையை இழந்துவிட்ட காரணத்தால், தொடர்ந்து இது போன்ற அவதூறுகளை பரப்புகிறார்கள்.

எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் நேரடியாக அவர்கள் கேட்டால், அதற்குண்டான விளக்கமும், தவறு நடந்திருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் எல்லா காலங்களிலும் தயாராக இருக்கிறது.

திருவண்ணாமலையில் நடைபெறுகின்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் இந்தாண்டு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளோம். பவுர்ணமி நாட்களில் ரூ.50 சிறப்பு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு பொது தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அறங்காவலர்கள் உள்பட அனைத்து பணிகளிலும் இந்துக்கள் அல்லாத ஒருவரைக் கூட எந்த பதவிலும் இதுவரை நியமித்ததில்லை. அரசியல் அப்பாற்பட்டு யாரால் கோவிலுக்கு நன்மைகள் கிடைக்குமோ அவர்களை தான் இந்த அரசு அறங்காவலர்களாகவும், அறங்காவலர் குழு தலைவராகவும் நியமித்துக் கொண்டிருக்கிறது. 48 கோவில்களில் அறங்காவலர்களை நியமித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story