பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தொடங்கியது.
செய்முறை தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு வருகிற 13-ந் தேதியும், பிளஸ்-1 பொதுத் தேர்வு வருகிற 14-ந் தேதியும் தொடங்குகிறது. வருகிற ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை 186 பள்ளிகளை சேர்ந்த 24 ஆயிரத்து 412 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து மையங்களிலும் முழு வீச்சில் நடந்து வருகிறது. தேர்விற்கான விடைத்தாள் மற்றும் மாணவ, மாணவிகளின் விபரங்கள் அடங்கிய முகப்பு பக்கம், அந்தந்த தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விடைத்தாளுடன் தைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
7-ந் தேதி வரை நடக்கிறது
இந்த நிலையில், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வுகள் நேற்று தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள 162 மையங்களில், வருகிற 7-ந் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடைபெறுகிறது. இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், ஹோம் சயின்ஸ், தொழிற்கல்வி, நர்சிங் போன்ற பாடங்களுக்கு செய்முறை தேர்வு தனித்தனி அட்டவணைகளில் நடத்தப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 186 அனைத்து வகை மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 162 மையங்களில் செய்முறை தேர்வை காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் நடைபெறுகிறது.
தனியார் பள்ளிகளுக்கு செய்முறை தேர்வு நடத்த, அரசு பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்களும், அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த முதுகலை ஆசிரியர்களும் என மொத்தம் 475 முதுகலை ஆசிரியர்கள் தேர்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.






