புத்தகங்களை படித்து அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்
சமூகவலைதளங்களில் மூழ்கி நேரத்தை வீணடிக்காமல் புத்தகங்களை படித்து அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்
விழுப்புரம்
இளையோர் திருவிழா
விழுப்புரத்தில் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் இளையோர் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை மாவட்ட கலெக்டர் மோகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
மனித சக்தியை சிறந்த முறையில் பயன்படுத்தும் நாடுகளே வல்லரசு நாடுகளாக உருவாகும். ஒவ்வொரு பள்ளி- கல்லூரிகளிலும் இளைஞர் மன்றம் உருவாக்க வேண்டும். அந்த இளைஞர் மன்றங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் பெற்றோர்கள், ஆசிரியர்களை மதித்து நடத்தல், பள்ளிகளில் ஒழுக்கமான முறையில் நடந்துகொள்ளுதல், சிறப்பாக படித்தல், தேர்ச்சி பெறுதல், சமுதாயத்தினை சீர்படுத்துதல் போன்ற கடமை உணர்வுடன் இருக்க வேண்டும்.
நேரத்தை வீணடிக்காமல்
பெற்றோர்கள், ஆசிரியர்கள் வழங்கும் அறிவுரைகளை பின்பற்றி செயல்பட்ட எந்தவொரு மாணவ- மாணவியும் இதுவரை தாழ்வான நிலைக்கு சென்றதில்லை. மாணவ- மாணவிகள் தங்கள் கடமையை சிறப்பாக செய்தால் அது உங்களுக்கும், உங்கள் பெற்றோருக்கும் பெருமையை சேர்க்கும். மாணவர்கள் எவ்வித தீய பழக்கத்திற்கும் ஆளாகாமல் பெற்றோர்கள், ஆசிரியர்களின் சொற்பேச்சை கேட்டு நடக்க வேண்டும்.
மேலும் வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பகுதிக்கு சென்று தேவையற்ற பகுதிகளை பார்வையிட்டு தங்கள் நேரத்தை வீணடிக்காமல் நல்ல புத்தகங்களை படித்து தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்வதோடு பள்ளி- கல்லூரிகளில் நடத்தும் போட்டிகளில் பங்கேற்று தனித்திறமைகளையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பரிசுகள்
விழாவையொட்டி மாணவ- மாணவிகளுக்கு கவிதை, ஓவியம், பேச்சுப்போட்டி, கலை விழா போட்டிகள், இளையோர் கலந்துரையாடல் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் ராம்சந்திரன், பல்நோக்கு பணியாளர் காந்தி, நிகழ்ச்சி உதவியாளர் கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.