ராயப்பேட்டையில் மாற்றுப்பாதையில் மெட்ரோ ரெயில் பணிகளை தொடரவேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்


ராயப்பேட்டையில் மாற்றுப்பாதையில் மெட்ரோ ரெயில் பணிகளை தொடரவேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
x

ஆலயங்களின் தொன்மையை கருதி, மாற்றுப்பாதையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டுமென அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது'எக்ஸ்' சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை ராயப்பேட்டையில் உள்ள 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த துர்க்கையம்மன் கோவில் ராஜகோபுரத்தையும், ரத்தின விநாயகர் ஆலயத்தையும் மெட்ரோ ரெயில் பணிகளுக்காக இடிக்க தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தி.மு.க.வினர் சொத்துகள் அமைந்திருக்கும் பகுதிகளை அரசு பணிகளுக்காக கையகப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிப்பாரா?. அண்ணா அறிவாலயத்துக்குள் அமைந்திருக்கும் திறந்தவெளி நிலத்தை, பூங்காவாக பராமரிக்கிறோம் என்று கூறி பல ஆண்டு காலமாக, சிலைகளை வைப்பதும், வாகன நிறுத்தமாகவும் பயன்படுத்தி வந்ததை பொதுமக்கள் மறக்கவில்லை.

மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான வரைவு அறிக்கை தயாரிக்கும்போதே, ஆலயங்களின் தொன்மையை கருதி, மாற்றுப்பாதையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால், தி.மு.க. இதை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் விட்டிருப்பதாகவே தெரிகிறது. பொதுமக்களுக்காகவே திட்டங்களே தவிர, பொதுமக்கள் நம்பிக்கையை சிதைப்பதற்காக அல்ல என்பதை தி.மு.க. அரசுக்கு நினைவுபடுத்துகிறேன். மாற்றுப் பாதையில் மெட்ரோ பணிகளைத் தொடர வேண்டும்.

மேலும், திருவள்ளூர் மாவட்டம் எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சியில், பட்டா இடத்தில் இருந்த 50-க்கும் அதிகமான வீடுகள் முன்னறிவிப்பு இன்றி இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டியில் பட்டா இடத்தில் கட்டப்பட்ட தனது வீட்டை இடித்ததால் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவமும் நடந்துள்ளது. தி.மு.க.வின் இந்த பொதுமக்கள் விரோத, அராஜக போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story