"யாரைக் காப்பாற்ற ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்..?"- எடப்பாடி பழனிசாமி கேள்வி


யாரைக் காப்பாற்ற ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்..?- எடப்பாடி பழனிசாமி கேள்வி
x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை, அவரது குடும்பத்தார் கோரிக்கைக்கிணங்க சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் தனது வீடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில், கைது செய்யப்பட்டுள்ள 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த 11 பேரில் திருவேங்கடமும் ஒருவர். இந்தவகையில், போலீசார் இவரிடம் விசாரணை நடத்த இன்று காலை மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்து சென்றுள்ளனர். அப்போது, திருவேங்கடம் தப்பிச்செல்ல முயன்றுள்ளார். இதனால் திருவேங்கடத்தை கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் இரண்டு முறை சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் செய்யப்பட்டதில், திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில் திருவேங்கடம் என்கவுண்டரில் சந்தேகம் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களுள் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது..?

கொலைக் குற்றவாளியை ஆயுதங்கள் பறிமுதல் செய்ய அழைத்து செல்லும் போது கைவிலங்கு மாட்டப்பட்டு தான் காவல்துறையினர் அழைத்துச் சென்றனரா..?

யாரைக் காப்பாற்ற இந்த என்கவுண்டர் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல என்று ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தாரும் அவரது கட்சியினரும் சந்தேகிக்கும் நிலையில், காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் அச்சந்தேகத்தை மேலும் வலுப்பெற செய்கிறது.

இந்த வழக்கு தொடர்பாக திருவேங்கடம் அளித்த வாக்குமூலம் முழுவதுமாக சீலிடப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்!

இவ்வழக்கின் விசாரணை மீது நம்பிக்கை இழந்து கொண்டே போவதால், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கைக்கிணங்க இதனை சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.


1 More update

Next Story