தென் மாவட்டங்களில் வேகமாக நிரம்பும் அணைகள்: உபரி நீரை வறண்ட நிலங்களுக்கு திருப்பி விட உத்தரவு
தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை திருப்பி விடும் சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் விடாமல் கொட்டி வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கூடங்குளம்- திருச்செந்தூர் சாலையிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தொடர் மழையால் தென் மாவட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில், தாமிரபரணி நீரை வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விடும் சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தாமிரபரணி- கருமேனியாறு-நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் சோதனை ஓட்டம் மேற்கொள்ள முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
நதி நீர் இணைப்பு திட்டத்தால் நெல்லை, தூத்துக்குடியில் 2,040 ஹெக்டேர் நிலங்கள் பாசனம் பெறும். நெல்லையில் 67.1 கி.மீட்டர் நீளத்திற்கும், தூத்துக்குடி 8.10 கி.மீட்டர், நீளத்திற்கும் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.