காஞ்சீபுரத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
காஞ்சீபுரத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ரம்ஜான் என்னும் ஈகை திருநாள் நேற்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான காஞ்சீபுரம் ஒலிமுகமது பேட்டை பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடைகள் அணிந்து வந்து சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அனைவரும் ஒன்று கூடி ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு உலக மக்கள் நன்மை அடைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பின்னர் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் ஏழை எளிய முஸ்லிம்களுக்கு மளிகை பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல் காஞ்சீபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திரோடு தேரடி அருகே உள்ள சுன்னத் ஜமாத் பள்ளிவாசல், ஐதர்பேட்டை தெருவிலுள்ள பள்ளிவாசல் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து நல்வாழ்த்துகளை கூறி அன்பை பரிமாறி கொண்டனர்.