மழைநீர் வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்த வேண்டும் - தலைமைச் செயலாளர் முருகானந்தம்
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை,
மழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை மேற்கொண்டார். அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்ற பணிகள், நடக்க வேண்டிய பணிகள் பற்றி தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார். தலைமைச் செயலாளருடன் அரசுத் துறை செயலாளர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் இருந்தனர். காணொலி மூலமாக அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகராட்சி கமிஷனர்கள் பங்கேற்றனர்.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதனால் வரக்கூடிய பேரிடரை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டு பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் விரைந்து முடிக்க தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டார்.
குறிப்பாக, மழைநீர் வடிகால் பணிகள், நீர்நிலைகளில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றுவது, நிவாரண முகாம் கண்டறியும் பணிகள் உள்ளிட்டவற்றை போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்த வேண்டும் என்று தலைமைச் செயலாளர் வலியுறுத்தினார். அந்தப் பணிகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மேற்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.