திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஓய்ந்தது கனமழை - மீட்புப்பணிகள் தீவிரம்...!


தினத்தந்தி 19 Dec 2023 7:20 AM IST (Updated: 19 Dec 2023 10:14 AM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறையத்தொடங்கியுள்ளது.

திருநெல்வேலி,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது.

கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால், மக்கள் மிகுந்த அவதியடைந்தனர். போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய கனமழை தற்போது ஓய்ந்துள்ளது. கனமழை ஓய்ந்தபோதும் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. அதேவேளை, மழை ஓய்ந்துள்ளதால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் படிப்படியாக வடியத்தொடங்கியுள்ளது. இதையடுத்து, மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


Next Story