'பராமரிப்பில் தொடர்ந்து அலட்சியம் காட்டும் ரெயில்வே துறை' - மதுரை ஐகோர்ட்டு கிளை அதிருப்தி


பராமரிப்பில் தொடர்ந்து அலட்சியம் காட்டும் ரெயில்வே துறை - மதுரை ஐகோர்ட்டு கிளை அதிருப்தி
x

பராமரிப்பில் ரெயில்வே துறை தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக மதுரை ஐகோர்ட்டு கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.

மதுரை,

தஞ்சாவூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சுந்தர விமலநாதன் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ரெயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை பெறுவதற்காக வழங்கப்படும் அடையாள அட்டையை பரிசோதிக்கும் முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் தமிழகத்தில் மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் இந்த நடைமுறை அமல்படுத்தப்படாததால் தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மனு மதுரை ஐகோர்ட்டு கிளை பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ரெயில் பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டினர்.

தமிழகத்தில் ஓடும் ஏராளமான ரெயில்களில் ஓட்டை உடைசல் பெட்டிகள்தான் இணைக்கப்படுவதாகவும், கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் பராமரிப்பில் ரெயில்வே துறை தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கு குறித்து ரெயில்வே தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.



Next Story