மதுரை-போடி இடையே 110 கி.மீ. வேகத்தில் விரைவு ரெயில் சோதனை ஓட்டம்
மதுரை-போடி இடையே 110 கி.மீ. வேகத்தில் விரைவு ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
மதுரை-போடி இடையே 110 கி.மீ. வேகத்தில் விரைவு ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
ரெயில் சேவை நீட்டிப்பு
மதுரை-போடி இடையே மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில்பாதையாக மாற்றும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த ரெயில் பாதையில் மதுரை-தேனி இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் போக்குவரத்து கடந்த ஆண்டு தொடங்கியது. போடி வரை பணிகள் முடிந்ததை தொடர்ந்து பல்வேறு கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து தேனி வரை இயக்கப்படும் பயணிகள் ரெயில் இன்று (வியாழக்கிழமை) முதல் போடி வரை நீட்டிக்கப்பட உள்ளது. அதுபோல், சென்னை-மதுரை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை போடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட ரெயில் சேவையும் இன்று முதல் தொடங்குகிறது.
சோதனை ஓட்டம்
இதற்கிடையே ரெயில் போக்குவரத்து நீட்டிப்பை முன்னிட்டு மதுரை-போடி இடையே இறுதிக்கட்ட விரைவு ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இதற்காக மதுரையில் இருந்து 2 பெட்டிகளுடன் ரெயில் என்ஜின் நேற்று காலை 10 மணி அளவில் புறப்பட்டது. 110 கி.மீ. வேகத்தில் இந்த விரைவு ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சரியாக 11.05 மணி அளவில் போடி ரெயில் நிலையத்திற்கு இந்த ரெயில் வந்தடைந்தது.
பின்னர் 11.45 மணி அளவில் இந்த ரெயில் போடியில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு விரைந்தது. அதுபோல் காலை, மாலையில் மதுரை-போடி இடையே ரெயில் என்ஜின் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.
ரெயில் சோதனை ஓட்டம் நடந்ததால் ரெயில் நிலையங்கள், ரெயில்வே கேட்கள், தண்டவாள பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்கள் ரெயிலை வேடிக்கை பார்த்தனர். புழுதி பறக்க விட்டபடி ரெயில் விரைந்து சென்றது. இதனை ஏராளமானோர் தங்களது செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தனர்.
சோதனை ஓட்டமாக வந்த ரெயிலில் ரெயில்வே அதிகாரிகள் பயணம் செய்து ரெயில் பாதையை ஆய்வு செய்தனர்.