3-வது நாளாக தொடரும் சோதனை... துப்பாக்கியுடன் துணை-ராணுவம் குவிப்பு; கரூர் முழுவதும் தீவிர கண்காணிப்பு
வரிஏய்ப்பு புகாரின் அடிப்படையில் கரூரில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர்,
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, கரூர், கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக மின்சாரத்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில்பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
3வது நாளான இன்று துப்பாக்கி ஏந்திய துணைராணுவ உதவியுடன் சோதனை நடந்து வருகிறது. அதன்படி இன்று காலை கரூர் மாநகரட்சி துணை மேயர் தரணி ரஜேந்திரன் வீட்டில் சோதனை நடத்தினர். ராயனூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று 8-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியது.
இதை போல கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிணத்துகடவு பகுதியில் கரூரை சேர்ந்த சங்கர் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையின் போது ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 15 துப்பாக்கி ஏந்திய போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெளிநபர்கள் நுழைவதை தடுக்க இரும்பு தடுப்புகள் அமைத்து போலிசார் கண்காணித்துவருகின்றனர். இதை போலவே கோவை மாவட்டம் கோல்டு பென்ஸ் பகுதி மற்றும் பந்தய சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும் சோதனை மேற்கொண்டனர்.
இதைபோலவே கரூர் வடக்கு காந்தி கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் சோபனா முருகன் வீட்டில் இரண்டு கார்களில் வந்த 7 அதிகரிகள் சோதனை மேற்கொண்டனர். அதிகாரிகள் மத்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். வருமான வரி சோதனை நடைபெறும் பகுதிகளில் போலிசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.