குழந்தை பெத்துக்க முடியாதவன் என திட்டியதால் ஆத்திரம்: ஆட்களை ஏவி தந்தையை கொலை செய்த மகன்
குமரியில், ரூ.4 லட்சம் பேரம் பேசி ஆட்களை ஏவி தந்தையை, மகனே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குமரி,
நாகர்கோவில் அருகுவிளை வாட்டர் டேங்க்ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 65). இவர் தேரேகால்புதூர் அக்சயா கார்டன் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 10-ந் தேதி காலையில் இவர் பணி முடிந்து வீட்டுக்கு மொபட்டில் புறப்பட்டார்.
அங்கிருந்து சிறிது தொலைவில் பிரபாகரன் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மொபட்டும் கீழே விழுந்த நிலையில் கிடந்தது. இதனை கவனித்த அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்கள் பிரபாகரனை மீட்டு அவர்கள் வேைல பார்த்த ஆஸ்பத்திரியிலேயே சேர்த்தனர்.
இதனை அறிந்த பிரபாகரன் மகன் அனீஷ்குமார் (33) அங்கு வந்தார். அப்போது என்னுடைய தந்தைக்கு வலிப்பு நோய் உண்டு, இதனால் அவர் மொபட்டில் வந்த போது கீழே விழுந்து தலை, கழுத்தில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரத்தை போலீசாரிடம் கொண்டு செல்ல வேண்டாம். இதற்கு நானே பொறுப்பு என கூறியதால் ஆஸ்பத்திரி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. ஆனால் 12-ந் தேதி அன்று பிரபாகரன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
அனீஷ்குமார் கூறியபடி முதலில் போலீசாரிடம் தகவல் தெரிவிக்காத ஊழியர்கள், பிரபாகரன் இறந்ததால் சுசீந்திரம் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு அனீஷ்குமார் கூறியபடி மொபட்டில் இருந்து கீழே விழுந்து பிரபாகரன் இறந்திருக்கலாம் என வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் வழக்கின் திடீர் திருப்பமாக பிரேத பரிசோதனையில் பிரபாகரனின் தலையில் இருந்த காயம், வெட்டு காயம் போல் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தினர். மேலும் அனீஷ்குமாரின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனினும் உறுதியான ஆதாரம் சிக்கவில்லை.
இந்தநிலையில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் தேரூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அனீஷ்குமார் உள்பட 3 பேர் சிக்கினர். இதனை தொடர்ந்து போலீசார் பிரபாகரனை கொன்றதாக அனீஷ்குமார், அவருடன் வந்த பரமார்த்தலிங்கபுரம் ராஜா (25), தட்டான்விளை பாரதிநகர் பகுதியை சேர்ந்த சுதன் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
தந்தை பிரபாகரனை ஆட்களை ஏவி கொன்றது ஏன்? என்பது தொடர்பாக அனீஷ்குமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
டிப்ளமோ முடித்த நான் சமையல் அறைக்கு கப்போடு செய்து கொடுக்கும் பணி செய்து வந்தேன். கடந்த 2019-ம் ஆண்டு அனுஷா என்பவரை மணந்தேன். பின்னர் திருமணமாகி 4 வருடங்களாகியும் குழந்தை இல்லை. அப்போது தந்தை பிரபாகரன், குழந்தை பெத்துக்க முடியாதவன், வாய் பேசுறான் பார் என என்னை திட்டி வந்தார். இது எனக்கு அவர் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே கடந்த 4 மாதத்திற்கு முன்பு எனக்கு குழந்தை பிறந்தது. ஆனாலும் என் தந்தையை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் என் தந்தை திட்டியதை பற்றி என்னுடன் சேர்ந்து வேலை பார்த்த ராஜா, சுதனிடம் தெரிவித்தேன். அவர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
மேலும் ராஜா சொந்தமாக வீடு வாங்க முடிவெடுத்தான். ஆனால் அவனுக்கு பணம் தேவைப்பட்டது. அப்போது நான் உனக்கு வீடு வாங்க ரூ.4 லட்சம் தருகிறேன். அதற்கு கைமாறாக என்னுடைய தந்தையை நீ கொல்ல வேண்டும் என்றேன். உடனே அவனும் சரியென்று கூறியதோடு, சுதனையும் அந்த திட்டத்தில் சேர்த்துக் கொண்டான்.
அதன்படி ராஜாவும், சுதனும் சேர்ந்து திட்டமிட்டபடி அரிவாளால் எனது தந்தையை வெட்டினர். இதில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போது, வலிப்பு நோயினால் கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கும் என கூறி நாடகமாடினேன். ஆனால் அடுத்தடுத்த நடந்த சம்பவத்தால் சிக்கல் உருவாகி போலீசாரிடம் வசமாக மாட்டிக் கொண்டேன். என்று அனீஷ்குமார் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
தந்தையை ஆள் வைத்து மகன் தீர்த்துக்கட்டிய சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.