திருவாரூர் மாவட்டத்தில் 5¼ லட்சம் டன் நெல் கொள்முதல்


திருவாரூர் மாவட்டத்தில் 5¼ லட்சம் டன் நெல் கொள்முதல்
x

திருவாரூரில் 95 சதவீதம் அறுவடைபணிகள் முடிந்து விட்ட நிலையில் நடப்பாண்டு இதுவரை 5¼ லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்பொருள்வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்


திருவாரூரில் 95 சதவீதம் அறுவடைபணிகள் முடிந்து விட்ட நிலையில் நடப்பாண்டு இதுவரை 5¼ லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்பொருள்வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணை திறப்பு...

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதியில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கோடை நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த ஆண்டு முன்னதாகவே அதாவது மே மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் சம்பா சாகுபடி பணியை தொடங்கினர். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் தீவிரமாக சாகுபடி பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த மழையால் நெற்பயிர்கள் பாதித்தன.

கொள்முதல் நிலையங்கள்

மழை விட்ட பிறகு மழையில் இருந்து தப்பிய நெற்பயிர்களை பூச்சிகொல்லி, உரம் இட்டு பாதுகாத்து அறுவடைக்கு தயார் செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் பெய்த மழையால் ஏராளமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை பாதுகாத்து அறுவடை பணியில் இறங்கினர். இதற்காக 522 கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து நுகர்பொருள்வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக குறுவை சாகுபடியில் மட்டும் 1 லட்சத்து 95 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது.

நெல்மூட்டைகள் தேங்காமல்...

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக 522 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு இதுவரை சம்பா சாகுபடியில் மட்டும் 5 லட்சத்து 35 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதியில் அறுவடை பணிகள் முடிந்து பருத்தி, பயறு சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கிவிட்டதால், கொள்முதல் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதனால் 422 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

தற்போது மீதம் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு சம்பா சாகுபடியில் மட்டும் 5 லட்சத்து 28 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை 5 லட்சத்து 35 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் பணிகள் நடந்து வருவதால் அதன் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்காமல் உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகள், மற்றும் ஆலைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


Next Story