புதுச்சேரி சட்டசபை வருகிற 20ஆம் தேதி கூடுகிறது - சபாநாயகர் செல்வம் அறிவிப்பு
புதுச்சேரி சட்டசபை வருகிற 20ஆம் தேதி கூடுகிறது என்று சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 9ஆம் தேதி கவர்னர் தமிழிசை உரையுடன் தொடங்கியது. 13ஆம் தேதி நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 14 நாட்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. சட்டசபையை 6 மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது.
அதன்படி வருகிற 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு புதுச்சேரி சட்டசபை கூடுகிறது என்று சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்துள்ளார். சட்டசபை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடுக்கு அனுமதியளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. அதேநேரத்தில் எதிர்கட்சிகள் தரப்பில் பேனர் கலாச்சாரம், சிலிண்டருக்கு மானியம் வழங்காதது, ரேஷன்கடைகளை திறக்காதது, மாநில அந்தஸ்தை வலியுறுத்தி ஜனாதிபதி, பிரதமரை சந்திக்காதது குறித்து பிரச்சனையை கிளப்ப திட்டமிட்டுள்ளனர்.