பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - தேனி மாவட்ட கலெக்டர்


பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - தேனி மாவட்ட கலெக்டர்
x
தினத்தந்தி 23 Nov 2023 8:03 PM IST (Updated: 23 Nov 2023 8:06 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

தேனி,

தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (23-11-2023) முதல் 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் இன்று மழை வெளுத்து வாங்கியது. இதனால் பொதுமக்களுக்கு தேனி மாவட்ட கலெக்டர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில்,

தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இனி வரும் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், அனைத்து வட்டத்திலும் உள்ள கண்மாய், குளங்கள் மற்றும் ஊரணிகளில் நீர் நிரம்பியுள்ளது. வெள்ளப்பெருக்கின் போது அவசரகால பணியினை மேற்கொள்ள அனைத்து துறையினருக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன, என்று கூறியுள்ளார்.

மேலும் ஆற்றங்கரைப்பகுதிகளில் வசிக்கின்ற பொது மக்கள் கவனமுடனும், முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறு, சோத்துப்பாறை அணை மற்றும் வைகை அணை ஆகிய ஆறுகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆற்றங்கரைப்பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்க கூடாது. நீர்நிலைகளில் அதிக நீர்வரத்து உள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, துவைக்கவோ மற்றும் வேறு காரணங்களுக்காகவோ நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம், என்று கூறியுள்ளார்.

மேலும், பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணிலும், 04546- 261093 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு மாவட்ட கலெக்டர்.ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.


Next Story