உத்திரமேரூர் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம்
உத்திரமேரூர் அடுத்த அகரந்தூளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா ஞானசேகரன், துணைத்தலைவர் வசந்திகுமார், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் பொன்.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உத்திரமேரூர் தாசில்தார் ஞானவேல் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ. க.சுந்தர் கலந்துகொண்டு 182 பயனாளிகளுக்கு ரூ.87 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத்திட்ட துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுதுறை அலுவலர்கள் கலந்துகொண்டு தங்களது துறை ரீதியான அரசின் திட்டப்பணிகள் குறித்து விளக்கி கூறினர்.
நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறையினர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அகரந்தூளி கிராமத்திற்கு வந்த மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அங்கன்வாடி மைய கட்டிடத்தை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார். கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு நிலைகளை கேட்டறிந்தார். மேலும் அகரந்தூளி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கூடத்தை பார்வையிட்டு மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். பின்னர் சமையல் கூடத்தையும் பார்வையிட்டார். அந்த கிராமத்தில் செயல்படும் இ-சேவை மைய கட்டிடத்தில் சென்று பார்வையிட்ட அவர் பின்னர் நூலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.