நான்குவழிச்சாலை விரிவாக்கப்பணி: சுரங்கப்பாதை அமைக்க கோரி பொதுமக்கள் மறியல் சிதம்பரம் அருகே பரபரப்பு

சிதம்பரம் அருகே நான்குவழிச்சாலை விரிவாக்கப்பணி நடைபெறும் இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாமலை நகர்,
சுரங்கப்பாதை அமைக்க கோரி...
சிதம்பரம் அருகே விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் நான்முனிசிபல் ஊராட்சி வழியாக நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான விரிவாக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிதம்பரம் நான் முனிசிபல் ஊராட்சிக்குட்பட்ட அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எங்களது குடியிருப்பு பகுதியில் நான்குவழி சாலை அமைந்தால் அதிக வாகன போக்குவரத்து இருக்கும். எனவே நாங்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி சென்று வர ஏதுவாக நான்குவழிச்சாலையின் குறுக்கே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். இருப்பினும் சுரங்கப்பாதை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை அங்குள்ள நெடுஞ்சாலைக்கு திரண்டு வந்து தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பியபடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் சுரங்கப்பாதை அமைப்பது குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






