திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் கழிவுநீரை கொட்டி பொதுமக்கள் போராட்டம்
திருவேற்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் கழிவுநீரை கொட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவேற்காடு,
திருவேற்காடு நகராட்சி, 10-வது வார்டுக்கு உட்பட்ட தேவி நகர் உள்ளிட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. கழிவுநீர் கால்வாயை தூர்வாராமல் இருப்பதால் கழிவுநீர் தேங்கி அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவிடம் பலமுறை நேரில் முறையிட்டும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பொதுமக்கள் போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட ெபாதுமக்கள், 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான நளினியின் கணவர் குருநாதன் தலைமையில் நேற்று காலை திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்கள் 4 குடங்களில் கொண்டு வந்த கழிவுநீரை நகராட்சி அலுவலக வளாகத்தில் ஊற்றி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதனால் நகராட்சி வளாகம் முழுவதும் சாக்கடை கழிவுநீரால் துர்நாற்றம் வீசியது. திருவேற்காடு போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்களின் பிரதிநிதிகள் மற்றும் நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா இடையே போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
அப்போது நகராட்சி கமிஷனரை கண்டித்து பொதுமக்கள் முழக்கமிட்டனர். அவர்கள் நகராட்சி முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து கலைத்து விட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவேற்காடு நகரமன்ற தலைவர் மூர்த்தி, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கழிவுநீர் கால்வாயை தூா்வாரி கழிவுநீர் தேங்காமல் இருக்கவும், அடிப்படை வசதிகள் செய்யவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.