சாலை பணிகள் தாமதமாவதை கண்டித்து பொதுமக்கள் மறியல்
தஞ்சையில் சாலை பணிகள் தாமதமாவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சையில் சாலை பணிகள் தாமதமாவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை போடுவதில் தாமதம்
தஞ்சை கீழவாசல் போலீஸ் நிலையம் அருகே உள்ளது பாரதிநகர். மாநகராட்சி 15-வது வார்டில் உள்ள பாரதி நகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதிதாக தார்ச்சாலை போடுவதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டன.
ஆனால் அதன் பிறகு பணிகள் எதுவும் நடைபெறாமல், சாலை போடுவது தாமதமானது. மேலும் இந்த சாலையின் பக்கவாட்டு பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு அப்படியே விடப்பட்டது. சாலை ஆக்கிரமிப்பு காரணமாக இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டு இருப்பதால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டது.
பொதுமக்கள் சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று மதியம் கிழக்கு போலீஸ் நிலையம் அருகே பஸ்சை வழிமறித்து சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தார்ச் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.