மறுசுழற்சி மையம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் மறியல்
திண்டுக்கல் பாரதிபுரத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மறுசுழற்சி மையம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மறுசுழற்சி மையம்
திண்டுக்கல் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உரப்பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரித்து விற்கப்படுகிறது.
இதேபோல் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்டு ஆலைக்கு எரிபொருளாக வழங்கப்படுகிறது. இதற்காக மக்காத குப்பைகள் உரப்பூங்காக்களில் சேமித்து வைக்கப்படுகின்றன.
ஆனால் குப்பைகளை பிரித்தல், உரம் தயாரித்தல் ஆகிய பணிகள் நடப்பதால் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்க வருவோர் ஒவ்வொரு உரப்பூங்காவுக்கும் செல்லும் நிலை உள்ளது.
இதை தவிர்த்து மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள், அட்டை, காகிதம் உள்ளிட்டவற்றை மொத்தமாக சேமித்து வைக்க மறுசுழற்சி மையம் அமைக்கப்படுகிறது.
சாலை மறியல்
திண்டுக்கல் பாரதிபுரம் கே.எம்.எஸ்.நகர், பழைய லாரிபேட்டை, கரூர் சாலை ஆகிய 3 இடங்களில் மறுசுழற்சி மையம் கட்டும் பணி நடக்கிறது. இதில் பாரதிபுரம் கே.எம்.எஸ்.நகரில் மறுசுழற்சி மையம் அமைப்பதற்கு அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் மறுசுழற்சி மையம் அமைப்பதை கைவிடக்கோரி பாரதிபுரம்-மேட்டுபட்டி சாலை சந்திப்பில் நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
போலீசாருடன் வாக்குவாதம்
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறுசுழற்சி மையத்தில் குப்பைகளை சேமித்து வைப்பதால் கொசுத்தொல்லை அதிகரித்து நோய் தொற்று ஏற்படும். எனவே மறுசுழற்சி மையம் அமைப்பதை கைவிட வேண்டும்.
மேலும் கே.எம்.எஸ்.நகருக்கு சாலை, சாக்கடை கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.