குப்பை மூட்டைகளை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல்


குப்பை மூட்டைகளை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 8 Aug 2023 2:45 AM IST (Updated: 8 Aug 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூா் அருகே குப்பையை அகற்றாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், குப்பை மூட்டைகளை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூா் அருகே குப்பையை அகற்றாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், குப்பை மூட்டைகளை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

பந்தலூர் அருகே பிதிர்காடு பஜார், சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அங்கு ஓட்டல்கள், கடைகள் உள்ளன. அப்பகுதியில் நெலாக்கோட்டை ஊராட்சி சார்பில், குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வீடுகள், கடைகளில் சேகரமான குப்பைகள் கடந்த சில நாட்களாக அகற்றப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் வீடுகள், கடைகளில் சேகரமான குப்பைகள் வீதிகளில் கொட்டப்பட்டு குவிந்து கிடந்தது. இதனால் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இருப்பினும், ஊராட்சி சார்பில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குப்பைகளை மூட்டைகளாக கட்டி, பிதிர்காடு சுங்கம் பகுதியில் உள்ள சாலையில் குப்பை மூட்டைகளை வைத்து நேற்று மறியிலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

மறியலால் பிதிர்காட்டில் இருந்து பாட்டவயல், அய்யன்கொல்லி, சுல்த்தான்பத்தேரி, கண்ணூர், கூடலூர் செல்லும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த அம்பலமூலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் நெலாக்கோட்டை ஊராட்சி சார்பில் பிதிர்காடு பஜாரில் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும் என்றனர். அதற்கு ஊராட்சி மூலம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ½ மணி நேரத்துக்கு பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story