திருத்தணி அருகே சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்; 12 பேர் மீது வழக்குப்பதிவு
திருத்தணி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திருத்தணி- பொதட்டூர்பேட்டை நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி சாலைமறியலில் ஈடுபட்டதாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
குண்டும் குழியுமான சாலை
திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ் நிலையம் செல்வதற்காக பயன்படுத்தும் மண் சாலை கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். தற்பேது சில தினங்களாக கோடை மழை பெய்து வருவதால் சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
பொதுமக்கள் சாலைமறியல்
இந்த நிலையில் சேதம் அடைந்த சாலையை விரைந்து சீரமைக்க கோரி கிருஷ்ணசமுத்திரம் காலனி கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிராமத்தின் அருகே உள்ள திருத்தணி - பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருத்தணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
12 பேர் மீது வழக்குப்பதிவு
இந்நிலையில் எந்தவித அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கிருஷ்ணசமுத்திரம் காலனியை சேர்ந்த வெங்கடேசன், தேசப்பன், முருகன், விஜயகுமார், ரோஷன், சேட்டு, வெங்கடேசன், சிவா, அஜித், சக்திவேல், கிரி உள்ளிட்டோர் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் காவல்துறையின் முன் அனுமதி இன்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம், சாலை மறியலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தெரிவித்துள்ளார்.