மாளந்தூர், ஆவாஜிப்பேட்டை கிராமங்களுக்கு செல்லும் சாலை பணியை உடனடியாக தொடங்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்
மாளந்தூர், ஆவாஜிப்பேட்டை கிராமங்களுக்கு செல்லும் சாலை பணியை உடனடியாக தொடங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 81 பேர் கைது செய்யப்பட்டனர்.
எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல்-சீதஞ்சேரி நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் மாளந்தூர், ஆவாஜிப்பேட்டை உள்பட சில கிராமங்கள் உள்ளது. வெங்கல்-சீதஞ்சேரி நெடுஞ்சாலையில் இருந்து இந்த கிராமங்களுக்கு செல்ல ரூ.6 கோடி செலவில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்கனவே இருந்த சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் பெயர்த்து உள்ளனர். இந்நிலையில், சாலை அமைய உள்ள சில பகுதிகள் வனத்துறைக்கு சோந்தமானது என தெரிகிறது. குறிப்பிட்ட அந்தப் பகுதியில் சாலை அமைக்க சீதஞ்சேரி வனத்துறை அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மாளந்தூர், ஆவாஜிப்பேட்டை கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பெரியபாளையம், வெங்கல் பகுதிகளுக்கு வரவேண்டி உள்ளதால் சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். சாலை இன்னும் அமைக்கப்படாததால் அந்த பகுதி வழியாக மோட்டார் சைக்கில்களில் செல்ல கடினமாக உள்ளது.
இந்த பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் மாளந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் தலைமையில் கிராம மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வெங்கல்-சீதஞ்சேரி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் மற்றும் சீதஞ்சேரி வன அலுவலர் கிளாமென்ட் எடிசன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் சாலை அமைக்க உடனடியாக உத்தரவிட வேண்டும் அல்லது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினால் மட்டுமே போராட்டதை கைவிடுவோம் என தெரிவித்தனர். சாலை மறியல் போராட்டத்தால்வெங்கல்-சீதஞ்சேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலை கைவிட மறுத்த 40 பெண்கள் உள்பட 81 பேரை போலீசார் கைது செய்து வேளகாபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.