கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
நல்லாட்டூர் ஊராட்சியில் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கூட்டு குடிநீர் திட்டம்
திருத்தணி தாலுகா, நல்லாட்டூர் ஊராட்சி அருகே உள்ள கொசஸ்தலை ஆற்றில் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை பிறப்பித்தது. இந்தத் திட்டத்திற்கு ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்து நிர்வாக ஒப்புதல் கடந்தாண்டு இறுதியில் வழங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு தேவையான நீரை கொசஸ்தலையாற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு ஆழ்துளை கிணறுகள் மூலம் நீர் எடுக்கப்பட்டு நல்லாட்டூர், பூனிமாங்காடு, என்.என்.கண்டிகை ஆகிய ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கப்படும்.
ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு
இந்த நிலையில் கடந்த வாரம் நல்லாட்டூர் கிராமத்தில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்று வந்தது. இதையறிந்த இந்த பகுதி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பணி நடக்கும் இடத்தை முற்றுகையிட்டனர். இதனால் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தெரிவிக்கையில் எங்கள் கிராமம் கொசஸ்தலை ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் எங்கள் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்படும். இந்த திட்டம் செயல்படுத்துவது குறித்து அதிகாரிகள் எங்கள் ஊராட்சிக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. எனவே இந்த திட்டத்தை எங்கள் பகுதியில் செயல்படுத்தக் கூடாது என தெரிவித்தனர்.
நிலத்தடி நீர்மட்டத்திற்கு பாதிப்பு இல்லை
அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாவது:-
நல்லாட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுவதால் 3 ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. மேலும் இந்த திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு ஏற்படாது. கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களுடன் சுமுக பேச்சுவார்த்தைக்கு பிறகு நல்லாட்டூர் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர்.