வீடு, வாகனம், தனி நபர் கடன்களுக்கான வட்டி அதிகரிப்பதால் பொதுமக்கள் கவலை


வீடு, வாகனம், தனி நபர் கடன்களுக்கான வட்டி அதிகரிப்பதால் பொதுமக்கள் கவலை
x

வீடு, வாகனம், தனி நபர் கடன்களுக்கான வட்டி அதிகரிப்பதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

திருச்சி

வட்டி உயர்வு

ரிசர்வ் வங்கியின் பண கொள்கை குழு கூட்டத்தில், குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை(ரெபோ ரேட்) 0.5 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ரெபோ ரேட் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு, இதுதான் அதிக வட்டி சதவீதம் ஆகும். கடந்த மே மாதத்தில் இருந்து 4-வது முறையாக வட்டி உயர்ந்துள்ளது. 4 முறையும் சேர்த்து மொத்தம் 1.90 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஏனைய வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும் நிலையில், வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் அதற்கான தவணை காலமும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

பொதுமக்கள் கவலை

இதனால் பொதுமக்களும், வர்த்தகர்களும் கவலையடைந்து புலம்பி வருகிறார்கள். இதுபற்றி பொதுமக்கள் கூறிய கருத்துக்கள் வருமாறு:-

திருச்சி ரங்காநகரை சேர்ந்த பீர்புலவர்:- நான், டி.டி.எச். விற்பனை செய்து வருகிறேன். என்னை போன்ற நடுத்தர மற்றும் பாமர மக்கள் வங்கிகளின் கடன் பெற்று அதன் மூலம் தங்கள் வீடு கட்டும் கனவை நனைவாக்கி கொள்கிறோம். தற்போது, வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சிறிது, சிறிதாக கடனை திருப்பி செலுத்தி வரும் நிலையில், வட்டிவிகிதம் 4-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. சொல்லப்போனால் எங்கள் தலையில் விழும் பேரிடி என்றே கூறலாம். 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கினால் தொழில் செய்ய முடியாமல் போனது. அந்த கால கட்டத்தில் வாங்கிய கடனுக்கு வட்டிக்கு வட்டி போட்டு வங்கிகள் வசூலித்து வருகின்றன. அதையே கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். இந்த நிலையில் எங்கள் கடன்களுக்கான வட்டி விகிதம் முன்பைவிட உயர்வதால், மாதந்தோறும் நாங்கள் செலுத்தும் இ.எம்.ஐ. தொகை ரூ.2 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதை எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியவில்லை. நாட்டின் பண வீக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வட்டியை குறைக்க வேண்டும்

தா.பேட்டை பகுதியை சேர்ந்த சிவா:- கொரோனா தொற்று காலத்தில் இருந்து மீண்டு தற்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளோம். இந்த சமயத்தில் வங்கியில் கடனுக்கு வட்டியை உயர்த்துவதால் கிராமப்புறங்களில் வசிக்கும் எங்களை போன்றவர்களை மேலும் பாதிப்படைய செய்யும். தினமும் வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருவாயை வைத்து குடும்ப செலவுபோக பணத்தை மிச்சப்படுத்தி வங்கிக்கு கடன் தொகை கட்டுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வங்கியில் கடன் வாங்கி சொந்தமாக தொழில் நடத்தினால் கூட வருமானம் பற்றாக்குறையாகத்தான் உள்ளது.

துறையூரில் கடை வைத்துள்ள தினேஷ்:- எங்களைப் போன்ற தொழில் முனைவோர் மற்றும் வீடு, வாகனங்கள் மற்றும் தனிநபர் கடன் பெற்றவர்கள் அசல் தொகையோடு, வட்டித்தொகையை சேர்த்து செலுத்த வேண்டிய தவணை காலம் அதிகரிக்கும். இதனால் கடன் பெற்ற ஏழை, எளிய மக்கள் தவணைத் தொகையை செலுத்த முடியாமல் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சுய தொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு தொழில் நலிவடையும் நிலை ஏற்படும் எனவே ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மீண்டும் மீண்டும் உயர்த்துவதை கைவிட்டு, வட்டி தொகையை குறைக்க வேண்டும்.

வேதனை அளிக்கிறது

மணப்பாறை அருகே உள்ள குட்டியபட்டியை சேர்ந்த செல்வகுமார்:-

தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசி உயர்வால் கடன் பெற்றுத்தான் வாழ வேண்டியது இருக்கிறது. இந்த நிலையில் வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்கள் மீதான வட்டி உயர்த்தப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. ஏற்கனவே உள்ள வட்டியே அதிகமாக உள்ளபோது, தற்போது மேலும் வட்டியை அதிகரிப்பது, சாமானிய மக்கள் இனி கடன் பெற்று வீடு கட்ட முடியாது என்ற நிலையைத்தான் ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story