'சிறைகளில் கைதிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துங்கள்' -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கைதிகளின் அடிப்படை வசதிகளை சிறைகளில் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும்படி சிறைத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கைதிகளின் அடிப்படை வசதிகளை சிறைகளில் ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும்படி சிறைத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிறைகளில் அடிப்படை வசதிகள்
மதுரை மக்கள் கண்காணிப்பகம் சார்பில் அதன் நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபென், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சிறைகளில் அலுவல் சாரா பார்வையாளர்களாக உரிய பயிற்சி பெற்றவர்களை நியமிக்கவும், சிறைகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.அப்போது அரசு வக்கீல்கள் எஸ்.பி.மகாராஜன், செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி, பெரும்பாலான சிறைகளில் விதிகளின்படி உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அலுவல்சாரா பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். மீதம் உள்ள சிறைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றனர்.
மன அழுத்தம் குறையும்
விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
தென் ஆப்பிரிக்காவில் நிற வெறிக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலா, "ஒரு நாட்டில் உள்ள உயர் குடிமக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை பார்க்காமல், அடித்தட்டு மக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை வைத்துதான் அந்த நாட்டை மதிப்பிட வேண்டும்" என்றார். அவரது கூற்றின்படி இந்த பொதுநல வழக்கை நாங்கள் கையாள்கிறோம்.
கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் மட்டும் 33 பேர் இறந்ததாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. சிறைகள் கண்காணிப்பு கேமரா மூலம் முழுமையாக கண்காணிக்கப்படுகின்றன. கைதிகள் தங்களின் குடும்பத்தினர், நண்பர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. அவர்கள், வாரத்திற்கு ஒருமுறை வீதம் மாதத்திற்கு 45 நிமிடமும் தொலைபேசியில் பேசலாம். இதன்மூலம் கைதிகளின் மன அழுத்தம் குறையும் என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவை ஏற்படுத்துங்கள்
அந்த வகையில், தமிழக சிறைகளில் கைதிகளின் நலனை கருத்தில் கொண்டு அலுவல்சாரா பார்வையாளரின் பதவிக்காலம் முடிந்த உடன் அடுத்த நபர்களை உடனடியாக நியமிக்க வசதியாக குழு ஏற்படுத்த வேண்டும். அலுவல் சாரா பார்வையாளர் கூட்ட தீர்மானம், அரசுக்கான பரிந்துரைகளை மாவட்ட, மாநில சிறை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
மாதிரி சிறை விதிகள் மற்றும் ஐ.நா.வின் மண்டேலா விதிகளின்படி சிறை விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அனைத்து சிறைகளிலும் இட நெருக்கடியை குறைக்க வேண்டும்.
கைதிகளின் உரிமை கையேட்டை அனைத்து கைதிகளுக்கும் வழங்கி, அதுதொடர்பான நடவடிக்கைகளையும், குழு பரிந்துரை மீதான நடவடிக்கைகளையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும். மருத்துவ வசதி, குடிநீர், ஆரோக்கியமான உணவு வசதியை ஏற்படுத்த வேண்டும்.
புத்தாக்க பயிற்சி
சிறை நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் பணியாளர்களுக்கு தேவையான புத்தாக்க பயிற்சி வகுப்புகளை தொடர்ச்சியாக நடத்த வேண்டும். கைதிகளின் குறைதீர்க்கும் பிரிவை செயல்படுத்த புகார்பெட்டிகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட வேண்டும். பார்வையாளர் முறை சிறப்பாக செயல்படும் வழிகாட்டுதல்களின்படி கூட்டங்களை அரசு தரப்பில் நடத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.