பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி கறவை மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்-சாலையில் பாலை ஊற்றியதால் பரபரப்பு


பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி கறவை மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்-சாலையில் பாலை ஊற்றியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 March 2023 12:15 AM IST (Updated: 21 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி வழங்கக்கோரி விவசாயிகள் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் பாலை ஊற்றி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பால் கொள்முதல் விலை

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி கம்பைநல்லூர் அருகே உள்ள திப்பம்பட்டி கூட்ரோட்டில் கறவை மாடுகளுடன், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கால்நடை தீவனங்களின் விலை 50 சதவீதம் உயர்வு மற்றும் உற்பத்தி செலவு உயர்வு ஆகிய காரணங்களால் பசும் பால் லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.52-ம் கொள்முதல் விலையாக வழங்க வேண்டும். ஆவின் நிர்வாகத்தை காப்பாற்றவும், தனியாரிடம் பால் ஊற்றுவதை தடுக்கவும் விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சாலையில் பாலை ஊற்றி...

கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பெண்கள் சாலையில் பாலை ஊற்றி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கூட்டுறவு சங்கத்தின் மார்ஜின் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். லிட்டருக்கு ரூ.7 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஆவின் பால் கூட்டுறவு அமைப்புகளுக்கு ஆணிவேராய் செயல்படும் கிராம சங்க பணியாளர்களை பணிவரன் முறைப்படுத்தி ஆவின்பணியாளராக நியமிக்கவேண்டும்.

ஆவின் சங்கங்களுக்கு பால் வழங்கும் விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு இலவச காப்பீடு செய்ய வேண்டும். கலப்பு தீவனம் மானிய விலையில் வழங்க வேண்டும்.

பால் பணம்

ஆரம்ப சங்க பணியாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட பயன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையத்திலிருந்து கிராம சங்கங்களுக்கு நேரடியாக பால் பணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் விவசாயிகள் சங்க தர்மபுரி மாவட்ட செயலாளர் குப்புசாமி, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் சென்னையன், நிர்வாகிகள் அண்ணாமலை, வெங்கடேசன், சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story