சொத்து அபகரித்ததாக வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு மனு
முன்ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை முன்னதாக கரூர் கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது.
சென்னை,
கரூர் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ் என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அதில், "அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், என்னுடைய மனைவி, மகள் பெயர்களில் உள்ள சொத்துகளை அபகரித்துக் கொண்டனர். அந்த சொத்துகளை எனது மனைவி, மகளை மிரட்டி பத்திரப்பதிவும் செய்துக் கொண்டனர். இந்த சொத்தின் மதிப்பு ரூ.100 கோடி ஆகும்'" என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஐகோர்ட்டில், முன்ஜாமீன் கேட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவர்து சகோதரர் சேகரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதில், ''புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளனர். இந்த மனுக்கள், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.