மண்டபத்தில் மீன்பிடிக்க தடை; 500 படகுகள் கரைகளில் நிறுத்தம்
பலத்த சூறாவளி காற்று கடல் சீற்றம் காரணமாக மண்டபத்தில் 500-க்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கடந்த 2 நாட்களாகவே வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீசி வருகின்றது. இதனிடையே மன்னார்குளைகுடா கடல் பகுதியில் 50 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன் துறை அதிகாரிகளால் மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியிலும் நேற்று மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதால் 100-க்கும் அதிகமான விசைப்படகுகள் மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பலத்த சூறாவளி காற்று கடல் சீற்றம் காரணமாக மண்டபத்தில் 500-க்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.அதேபோல் வடக்கு கடலான பாக்ஜல சந்தி கடல் பகுதியிலும் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் வடக்கு துறைமுக பகுதியில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 200-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காற்றின் வேகம் குறைந்து கடல் சீற்றம் குறைந்த பின்னரே வழக்கம்போல் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்படும் என மீன்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.