தொழில் அதிபர், மகனிடம் தனிப்படை போலீசார் விசாரணை
தொழில் அதிபர், மகனிடம் தனிப்படை போலீசார் விசாரணை
கோவை, ஜூலை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொழில் அதிபர், மகனிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரித்தனர்.
கொலை, கொள்ளை வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தற்போது மறு விசாரணை நடந்து வருகிறது. தனிப்படை போலீசார் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன், சஜிவன் மற்றும் சசிகலாவிடமும் விசாரணை நடத்தினர்.
2-வது நாளாக விசாரணை
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமிக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சோதனையின்போது சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் அவருடைய மகனான செந்தில்குமாரிடம் நேற்று கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் உள்ளஅலுவலகத்தில் வைத்து 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. அவரிடம் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக செந்தில்குமாரிடம் ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அவரும் தனக்கு தெரிந்த தகவல்களை தனிப்படையினரிடம் தெரிவித்தார். அவற்றை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.
ஆஜர்
இதற்கிடையே செந்தில்குமாரின் தந்தையும் மணல் ஒப்பந்ததாரரும், தொழில் அதிபருமான ஆறுமுகசாமிக்கும் விசாரணைக்கு ஆஜராக கோரி தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினர். அதன்படி நேற்று காலை ஆறுமுகசாமி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள விசாரணை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் தனியாக தனிப்படையினர் விசாரணை நடத்தினர். ஒரே நேரத்தில் தந்தை, மகனிடம் கோடநாடு வழக்கு தொடர்பாக தனிப்படையினர் விசாரணை கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
----