முதுமலை யானைகள் முகாமை பார்வையிட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார். முதுமலை யானைகள் முகாமை பார்வையிட்ட அவர், ஆஸ்கார் விருது பெற்ற படத்தில் நடித்த பாகன் தம்பதிக்கு பாராட்டு தெரிவித்தார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார்.
முதுமலை வருகை
ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடகா மாநிலம் மைசூரு விமான நிலையத்துக்கு மதியம் 2.30 மணிக்கு வந்தார். பின்னர் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு, ராணுவ ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் மசினகுடிக்கு மாலை 3.45 மணிக்கு வந்தார். தமிழகம் வந்த ஜனாதிபதியை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஜனாதிபதி காரில் சிறப்பு பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் புடைசூழ 7 கி.மீ தொலைவில் உள்ள முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு 4 மணிக்கு சென்றார். அங்கு ஜனாதிபதியை தமிழக வனத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, தலைமை வன உயிரின பாதுகாப்பாளர் சீனிவாச ரெட்டி, கலெக்டர் அம்ரித் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
பாகன் தம்பதிக்கு பாராட்டு
இதைத்தொடர்ந்து முகாமில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வளர்ப்பு யானைகள் பிளிறியவாறு தும்பிக்கையை உயர்த்தி திரவுபதி முர்முவை வரவேற்றன.
பின்னர் ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளி ஆகியோரை ஜனாதிபதி சந்தித்து பாராட்டினார். இதையடுத்து முதுமலை முகாமில் காலை, மாலை வளர்ப்பு யானைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு தயாரிப்பதை நேரில் பார்வையிட்டார்.
அதில் சேர்க்கப்படும் சிறுதானியங்கள், பழங்கள் உள்ளிட்ட உணவு தயாரிக்கும் முறையை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ரகு, பொம்மி, காமாட்சி, கிருஷ்ணா, சந்தோஷ், பாமா ஆகிய 6 வளர்ப்பு யானைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கரும்புகள் வழங்கி மகிழ்ந்தார். பின்னர் யானைகளை பராமரிக்கும் முறைகளை பாகன்கள், வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
உலகளாவிய அங்கீகாரம்
முதுமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த 28 பாகன்கள், கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தை சேர்ந்த 10 பாகன்களை ஜனாதிபதி சந்தித்து பேசினார். அப்போது பாகன்கள் தேவராஜ், கிரிமாறன், சுரேஷ், விக்ரம் ஆகியோரிடம் கலந்துரையாடினார். அப்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசும்போது கூறியதாவது:-
ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தின் மூலம் தமிழக வனத்துறையின் செயல்பாடுகள் மற்றும் யானைகள் பராமரிப்பு மேலாண்மைக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்து இருப்பது பெருமைக்குரியது. நமது தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதன் ஒரு பகுதியாக, யானைகளை பாதுகாப்பது நமது பொறுப்பு. ஆசியாவிலேயே யானைகள் பாதுகாப்பில் முன்னோடியாக திகழும் வகையில், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம் அமைக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
பழங்குடியினரின் முக்கிய பங்கு
இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் பழங்குடியின சமூகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை உறுதி செய்வதும், அடிப்படை வசதிகளை வழங்குவதும் மிகவும் முக்கியம். தெப்பக்காடு முகாமை நிர்வகிப்பதற்கு பெட்ட குறும்பர், காட்டு நாயக்கர், மலசர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய அறிவு மற்றும் அனுபவம் பயன்படுத்தப்படுவதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பாகன்கள் அனைவருக்கும் இனிப்புகள், சால்வைகள் அடங்கிய அன்பளிப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். முதுமலையில் ஜனாதிபதி 45 நிமிடம் இருந்தார். இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு ஜனாதிபதி மாலை 4.45 மணிக்கு முதுமலை தெப்பக்காட்டில் இருந்து காரில் மசினகுடிக்கு புறப்பட்டார். தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் மசினகுடி பஜாரை அடைந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களை பார்த்த ஜனாதிபதி திரவுபதி முர்மு காரில் இருந்து இறங்கினார்.
உற்சாக வரவேற்பு
தங்களை பார்க்க காரை விட்டு இறங்கிய ஜனாதிபதியை பார்த்த பொதுமக்கள் உற்சாக குரல் எழுப்பினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஜனாதிபதி சிரித்த முகத்துடன் பொதுமக்களுக்கு சாக்லேட்டுகளை வழங்கினார். மேலும் சிறுமி ஒருவர் ஜனாதிபதிக்கு புத்தகம் வழங்கினார். அதன் பிறகு அவர் தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதையடுத்து 5.20 மணிக்கு மசினகுடியில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு ஹெலிகாப்டரில் மைசூரு புறப்பட்டு சென்றார்.
சென்னை வந்தார்
பின்னர் மைசூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். இரவு 7 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், சென்னை மேயர் பிரியா, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உள்ளிட்டோரும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை வரவேற்றனர்.
பட்டமளிப்பு விழா
விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட திரவுபதி முர்மு, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வந்தார். இரவு அங்கு தங்கினார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் உள்ள மைதானத்தில், ஜனாதிபதிக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட இருக்கிறது. அதன்பின்னர், அங்கிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அவர் செல்கிறார். அங்கு நடக்கும் சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு
இந்த விழாவில் ஜனாதிபதியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மற்றும் செனட் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழா பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழா முடிந்ததும் ஜனாதிபதி கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு மதிய உணவு அருந்துகிறார். தொடர்ந்து, பிற்பகல் 3.15 மணி முதல் 3.45 மணி வரை ஜனாதிபதியுடன் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரதிநிதிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை முக்கிய பிரமுகர்களுடனான சந்திப்பு நடைபெறுகிறது.
தர்பார் அரங்கத்துக்கு பாரதியார் பெயர்
மாலை 7 மணியளவில் கிண்டி ராஜ்பவனில் நடக்கும் பாரதியார் படத் திறப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். பின்னர் அங்குள்ள தர்பார் அரங்கத்திற்கு மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பெயரை அவர் சூட்டுகிறார். அதைத் தொடர்ந்து நடைபெறும் கலாசார நிகழ்ச்சிகளையும் அவர் கண்டுகளிக்கிறார்.
பின்னர் இரவு 8 மணிக்கு ஜனாதிபதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அதற்கான அழைப்பை கவர்னரின் செயலாளர் நேரில் சென்று முதல்-அமைச்சரிடம் கொடுத்து உள்ளார்.
அவர்கள் தவிர ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, தூதரக அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்களும் இந்த விருந்தில் கலந்து கொள்கின்றனர். அதன்பின்னர், கவர்னர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி, நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு சாலை மார்க்கமாக சென்னை விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு புறப்பட்டு செல்கிறார்.