கொள்ளிடக்கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை


கொள்ளிடக்கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
x

கொள்ளிடக்கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் நடந்தன.

திருச்சி

லால்குடி:

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, லால்குடியை அடுத்த கூகூர் மற்றும் இடையாற்றுமங்கலம், அன்பில், செங்கரையூர், ஆனந்திமேடு ஆகிய கொள்ளிடக் கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மணல் மூட்டைகள் அடுக்கப்பட உள்ளன. இதையொட்டி லால்குடி நீர்வளத்துறை உதவி பொறியாளர் அலுவலகம் முன்பு நீர்வளத்துறை ஊழியர்கள் மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் லால்குடி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி செயற்பொறியாளர் கூடுதல் பொறுப்பு ராஜா ஆகியோரின் ஆலோசனைப்படி பாசன உதவியாளர்கள் மற்றும் ஊழியர்கள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் புள்ளம்பாடி ஒன்றியம் திண்ணகுளம் மற்றும் விரகாலூர் கிராமங்களில் கொள்ளிட கரையோரங்களில் நீரின் அளவை லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன், தாசில்தார் செசிலினாசுகந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், மாதவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கரையோரங்களில் கூடுதல் வெள்ளம் ஏற்பட்டால் தடுப்பு நடவடிக்கைகள், பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர். இந்நிலையில் கொள்ளிடக்கரைகளில் தடுப்புகள் ஏற்படுத்த தயார் நிலையில் 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை கொண்டு வந்து கரைகளில் அடுக்கியுள்ளனர்.


Next Story