வரலாற்றை திரித்துக் கூறுவதை பிரகாஷ்ராஜ் நிறுத்த வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


வரலாற்றை திரித்துக் கூறுவதை பிரகாஷ்ராஜ் நிறுத்த வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x

இடஒதுக்கீடு குறித்து பிரகாஷ்ராஜ் பேசியது நகைப்பை ஏற்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 50% இட ஒதுக்கீட்டிற்காகப் போராடி வரும் நிலையில் எப்போதோ 69% இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி" என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜின் கருத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது;

"வரலாற்றை எண்ணி பார்க்காமல் எதாவது புகழ வேண்டும் என்ற கட்டளைக்கு ஏற்றது போல நடிகர் பிரகாஷ்ராஜ், 69% இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் இருப்பதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தான் காரணம் என்பதை பேசியுள்ளது நகைப்பை ஏற்படுத்துகிறது. 69% இடஒதுக்கீட்டை மத்திய அரசு வரைமுறைப்படுத்த எண்ணும் போது தமிழ்நாட்டில் அன்றைய முதலமைச்சராக இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமூக நீதிக்கு எதிராக அமைந்துவிடும் என கடுமையாக எதிர்த்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் மட்டுமே 69% இடஒதுக்கீடு அன்று பாதுகாக்கப்பட்டது. இதற்காக தான் திராவிட கழக தலைவர் கி.வீரமணி ஜெயலலிதாவுக்கு 'சமூகநீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் வழங்கினார். இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளாமல் அமைச்சர் சொல்லிக் கொடுப்பதை மட்டும் பேசி மக்களை ஏமாற்ற நினைப்பது கண்டனத்திற்குரியது. இது போன்று வரலாற்றை திரித்துக் கூறுவதை பிரகாஷ்ராஜ் நிறுத்திக் கொள்ள வேண்டும்"

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story