கவுன்சிலர்கள் வராததால் புலியூர் பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் மீண்டும் ஒத்தி வைப்பு
கவுன்சிலர்கள் வராததால் புலியூர் பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
கரூர்,
உள்ளாட்சி தேர்தல்
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டுள்ளது. இது நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 12 வார்டுகளில் தி.மு.க.வும், ஒரு வார்டில் சுயேச்சையும், ஒரு வார்டில் பா.ஜ.க.வும், ஒரு வார்டில் இந்திய கம்யூனிஸ்டும் வெற்றி பெற்றன. இதனையடுத்து புலியூர் பேரூராட்சி தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்குவதாக தி.மு.க. கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 1-வது வார்டு கவுன்சிலர் கலாராணி (52) என்பவர் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் 4-ந்தேதி நடைபெற்ற தலைவருக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர்களின் ஒருவரான 3-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புவனேஸ்வரி என்பவரை தலைவராக தி.மு.க. கவுன்சிலர்கள் முன்மொழிந்து வழி மொழிந்ததால் அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வெற்றிபெற்றவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியதை அடுத்து மார்ச் 8-ந்தேதி புவனேஸ்வரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கூட்டம் ஒத்திவைப்பு
இதனை அடுத்து தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்படாத பகுதிகளுக்கு மார்ச் 26-ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி புலியூர் பேரூராட்சி தலைவரை தேர்வு செய்ததற்காக நடைபெற்ற கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கவுன்சிலர் கலாராணி, பா.ஜ.க. கவுன்சிலர் விஜயகுமார், தி.மு.க. கவுன்சிலரும் துணைத் தலைவருமான அம்மையப்பன் ஆகியோர் மட்டும் பங்கேற்றனர். மற்ற கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. இதனால் கூட்டம் நடத்த குறைந்தபட்சம் 8 உறுப்பினர்கள் தேவை என்பதால் போதிய கோரம் இல்லாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தனர்.
கவுன்சிலர்கள் வரவில்லை
இதனை அடுத்து மீண்டும் புலியூர் பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதற்கு உதவி இயக்குனர் தணிக்கை லீலாகுமார் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டார். நேற்று காலை 9.30 மணிக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கவுன்சிலர் கலாராணி, 4-வது வார்டு பா.ஜ.க. கவுன்சிலர் விஜயகுமார், தி.மு.க. 10-வது வார்டு கவுன்சிலர் ஆனந்தன் ஆகிய 3 பேர் மட்டும் வந்திருந்தனர். மற்ற தி.மு.க. கவுன்சிலர்கள் 11 பேர், சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் என 12 கவுன்சிலர்களும் கூட்டத்திற்கு வரவில்லை.
மீண்டும் ஒத்தி வைப்பு
இதனையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் உரிய கோரம் இல்லாததை சுட்டிக்காட்டி கூட்டத்தை மீண்டும் ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இதனையடுத்து 2 முறை பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் சிலர் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டு தலைவரை உரிய முறையில் தேர்வு செய்ய வேண்டும்.அதற்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட மற்ற கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். இதனால் நேற்று புலியூர் பேரூராட்சியில் பரபரப்பு ஏற்பட்டது.