பொங்கல் சிறப்பு பேருந்துகள்: ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம்


பொங்கல் சிறப்பு பேருந்துகள்: ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம்
x
தினத்தந்தி 13 Jan 2024 7:17 AM IST (Updated: 13 Jan 2024 8:35 AM IST)
t-max-icont-min-icon

ஒரே நேரத்தில் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளதால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். குறிப்பாக, சென்னையில் தங்கி இருப்பவர்களும், கல்வி, வேலை காரணமாக வந்தவர்களும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட பஸ், ரெயில்களில் செல்ல முன்கூட்டியே ஆயத்தமாகி விடுவார்கள்.

அந்தவகையில், இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பஸ் மற்றும் ரெயில்களில் முன்பதிவு தொடங்கி இருக்கைகள் வேகமாக நிரம்பியது. இதையடுத்து பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம் நேற்று முதல் தொடங்கியது. இதனால், காலை முதலே பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. மேலும், சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 901 பஸ்கள் பிற மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன.

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் உதவிக் குழுக்கள் மூலமும் பயணிகளுக்கு வழிகாட்டுதல்கள் செய்யப்பட்டது. முன்பதிவு செய்யாத பயணிகளின் வசதிக்காக நேற்று இரவு 7 மற்றும் 8-வது நடைமேடைகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. போதுமான இருக்கை வசதி, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பயணிகள் உடமைகளை எளிதில் எடுத்துச்செல்ல ஆங்காங்கே 'டிராலி' வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களை அழைத்துச்செல்ல 5 பேட்டரி வாகனங்கள் உடனுக்குடன் இயக்கப்பட்டது.

இதற்கிடையே, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது, பஸ்களில் ஏறி பயணிகளின் கருத்துகளை கேட்டறிந்து, பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், முதல் நாளான நேற்று சென்னையில் இருந்து இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்துகளில் 2.17 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மக்களின் படையெடுப்பால் நேற்று மாலை பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி.சாலை, கிண்டி கத்திப்பாரா பகுதி, ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து ஆலந்தூர் நோக்கி செல்லும் சாலைகளில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து நிலையங்கள் மட்டுமல்லாது சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட மிகவும் அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story