தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்


தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 3 March 2024 5:18 AM IST (Updated: 3 March 2024 11:56 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.

சென்னை,

போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் நடைபெறும். இந்த மையங்களில் 57 லட்சத்து 84 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். தடுப்பு மருந்து கொடுக்கும் முன்பு சோப்பு போட்டு கை கழுவுவது, சானிடைசர் உபயோகப்படுத்துவது கட்டாயமாகும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியம்.

விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் டாக்டர்கள், ஆஸ்பத்திரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படுகிறது.

இதேபோல, குழந்தைகளின் வசதிக்காக இன்று முக்கிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சோதனைச்சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையை தக்கவைத்துக்கொள்வதும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாப்பதும் மிகவும் அவசியம். எனவே, பெற்றோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story