பெண் காவலரை தாக்கி செயின் பறிப்பு - தொடர் சர்ச்சையில் சிக்கும் காவலர் கனகராஜ்...!


பெண் காவலரை தாக்கி செயின் பறிப்பு - தொடர் சர்ச்சையில் சிக்கும் காவலர் கனகராஜ்...!
x

ராமநாதபுரத்தில் பெண் காவலரை தாக்கி காவலர் செயினை பறித்து சென்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கோடரியேந்தல் பகுதியை சேர்ந்தவர் போலீஸ்காரர் கனகராஜ்(வயது35). கடந்த 2016-ம் ஆண்டு பணியில் சேர்ந்து மணிமுத்தாறு பட்டாலியனில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது மதுரை பட்டாலியனுக்கு மாற்றம் செய்யப்பட்டு ராமேசுவரம் பகுதியில் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இவரின் மனைவி ராமநாதபுரம் அருகே உள்ள கூரியூரை சேர்ந்த முருகவள்ளி(33). இவர் ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் காவலர் கனகராஜ் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்ததுடன் மதுபோதைக்கு அடிமையாகி முருகவள்ளியை அடித்து கொடுமைப்படுத்தினாராம்.

இதனால் அவரை பிரிந்து வந்த முருகவள்ளி கோர்ட்டில் விவாகரத்து பெற்றுள்ளார். இதனை எதிர்த்து காவலர் கனகராஜ் தனது மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2-ந் தேதி மேற்படி கனகராஜ் ராமநாதபுரம் ரோமன்சர்ச் பகுதியில் உள்ள அவரின் மகள் படிக்கும் பள்ளிக்கு சென்று பிரச்சனை செய்தாராம்.

இதனால் அந்த பள்ளியின் ஆசிரியர் முருகவள்ளியை தொடர்பு கொண்டு பள்ளிக்கு வருமாறு கூறினாராம். இதனை தொடர்ந்து முருகவள்ளி அவரின் தந்தை, அக்காள் ஆகியோருடன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது முருகவள்ளியை பள்ளி அருகில் வழிமறித்த காவலர் கனகராஜ் கொலை மிரட்டல் விடுத்ததுடன், முருகவள்ளியின் கழுத்தில் கிடந்த சங்கிலியை பறித்து கொண்டு ஓடிவிட்டாராம்.

இதுகுறித்து முருகவள்ளி ராமநாதபுரம் நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராணி வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தார்.

இதனிடையே மேற்கண்ட காவலர் கனகராஜ் தனது மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் தன்னை தாக்கியதாக கூறி பரமக்குடி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீசார் அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்து போலீஸ் காவலுடன் கண்காணித்து வருகின்றனர்.

போலீஸ் காவலர் ஒருவர் பெண் காவலரான தனது மனைவியை தாக்கி செயினை பறித்து சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதே காவலர் கனகராஜ் கடந்த பிப்ரவரி மாதம் ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டருடன் செல்போனில் தொடர்பு கொண்டு வாக்குவாதம் செய்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதும், இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் டி.ஜி.பி.க்கு சந்திக்க நேரம் கேட்டு வெளியிட்ட வீடியோவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்கும் முன்னர் மனைவியை தாக்கி செயினை பறித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story