திருச்சியில் ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்
திருச்சியில் ரவுடி ஜம்புகேஸ்வரனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரன் காவிரிக் கரையில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தபோது திருச்சி போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். அப்போது ஜம்புகேஸ்வரன் காவலர்களை அரிவாளால் தாக்கிவிட்டு தப்ப முயன்றார். உடனே ஜம்புகேஸ்வரனை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர்.
போலீஸ் சுட்டத்தில் கால் முட்டியில் காயமடைந்த ஜம்புகேஸ்வரனுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரவுடி ஜம்புகேஸ்வர் தாக்கியதால் காயமடைந்த காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கின் முழு விவரம்:-
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு (எ) சந்திரமோகன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரெயில்வே பாலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீரங்கம் ரெயில் நிலையம் அருகே உள்ள பி கிளாஸ் ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த பூக்கட்டும் தொழில் செய்து வரும் பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ், அவரது அண்ணன் சரவணன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த ஆட்டுக்குட்டி சுரேஷ் சில காலம் வெளியூரில் தங்கி இருந்தார். பழனி முருகன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தார். இந்நிலையில் தனது மனைவி ராகினியுடன் நவல்பட்டு பகுதியில் உள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், சுரேஷ் ஓட்டி வந்த வண்டி மீது மோதினர். இதில் சுரேஷ் அவரது மனைவி ராகினி இருவரும் கீழே விழுந்தனர். பின்னர், 5 பேர் சூழ்ந்து கொண்டு, சுரேஷை சரமாரியாக வெட்டினர். தடுக்கச் சென்ற அவரது மனைவி ராகினிக்கும் காலில் வெட்டு விழுந்தது. இதில் சுரேஷின் தலைப்பகுதி முழுவதும் சிதைக்கப்பட்டது.
வெட்டுப்பட்ட சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாநகர துணை ஆணையர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, சுரேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது மனைவி ராகினியை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
2020 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட தலைவெட்டி சந்துரு, ஆட்டுக்குட்டி சுரேஷ் ஆகியோர் ஒன்றாக ஸ்ரீரங்கம் சத்தாரவீதியில் உள்ள பூ மார்க்கெட்டில் இனாம் பூக்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தனர். இதில் ஏற்பட்ட மோதல் காரணமாக தலைவெட்டி சந்துரு கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தற்போது பழிக்குப்பழியாக ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரன், போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய நிலையில், அவரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். ஜம்புகேஸ்வரன் 15 வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.