கைத்துப்பாக்கியுடன் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகள்
சட்டம்- ஒழுங்கை பேணிக்காக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும், சட்டம்- ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
அதன் அச்சாரம்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டு தற்போது ஜாமீனில் உள்ள ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இதனிடையே கூடுதல் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.யாக புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம், போலீசார் அனைவரும் பொதுமக்களிடம் நற்பெயர் எடுக்கும் அளவுக்கு பணியாற்ற வேண்டும், பணியின்போது சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கட்டாயம் கைத்துப்பாக்கி வைத்திருக்க வேண்டும் என்றும், ஏட்டுகள், தலைமை ஏட்டுகள் ஆகியோர் எப்போதும் கையில் லத்தி வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் கைத்துப்பாக்கியுடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றங்களை தடுப்பது சம்பந்தமான ரோந்துப்பணிக்கு செல்லும்போதும் மற்றும் போராட்டம் நடைபெறும் இடங்களில் பணியில் இருக்கும்போதும், ஏன் அரசு நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணிக்கு செல்லும்போதும் தற்போது கைத்துப்பாக்கியுடனே பணியாற்றி வருகின்றனர்.
அதுபோல் ஏட்டுகள், தலைமை ஏட்டுகளும் கையில் லத்தியுடன்தான் ரோந்துப்பணி மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் இத்தகைய நடவடிக்கைகளால் இனி குற்ற சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.